வடை என்றாலே..உளுந்த வடை, பருப்பு வடை, கீரை வடை, வெங்காய வடை போன்றவற்றை சாப்பிட்டு சலித்து விட்டதா? ஒரு முறை பச்சைப்பயறை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த வடையை செய்து பாருங்கள். பச்சைப்பயறு வடை எப்படி செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
- பச்சைப்பயறு - 1 1/2 கப்
- வெங்காய்ம் - 1
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - 1 சின்ன துண்டு
- கறிவேப்பிலை - 15
- கொத்தமல்லி - சிறிதளவு
- சோம்பு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கல் உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பச்சை பயறு வடை செய்முறை:
- முதலில், பச்சை பயறை நன்கு கழுவி சுடுநீரில் 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். இல்லையென்றால், இரவில் ஊற வைத்து காலையில் வடை செய்யலாம்.
- இப்போது, ஊறவைத்த பச்சைப்பயறில் இருந்து பாதியை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். பின்னர், மீதமுள்ள பச்சை பயறை மிக்ஸியில் சேர்த்து, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).
- இப்போது அரைத்த விழுதை அதே பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கைகளை பயன்படுத்தி கலந்து விடவும். சுவை பார்த்து தேவைப்பட்டால் தூள் உப்பு சேர்க்கவும்.
- அடுத்ததாக, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இப்போது, கையில் லேசாக எண்ணெய் தடவி, பிசைந்து வைத்த மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து, தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- ஒரு புறத்தில் பொன்னிறமாக வந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை பயறு வடை ரெடி..