இனிப்பு பலகாரம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? அதுவும் செய்த உடனே காலியாகும் அளவிற்கு சுவையாக இருந்தால்? அப்படி, வாயில் வைத்ததும் கரையும் சுவையான 'செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை'-ஐ ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க. வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து பாரம்பரிய இனிப்பை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாங்க..
உக்காரை செய்ய தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு - 1 கப்
- வெள்ளம் - 3 கப்
- நெய் - 1/2 கப்
- ரவை - 1/2 கப்
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- முந்திரி - 15
- ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
உக்காரை செய்வது எப்படி?:
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
- இப்போது, இந்த பருப்பை கழுவி குக்கரில் சேர்க்கவும். அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 3 விசில் விடவும்.
- இதற்கிடையில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெள்ளம், அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து வெள்ளம் நன்கு கரையும் வரை கிளறி விடவும். பாகு தயாரானதும், அடுப்பை அணைக்கவும்.
- இப்போது, பருப்பு வறுத்த அதே கடாயில், நெய் சேர்த்து சூடானதும், ரவை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர், துருவிய தேய்காய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அடுத்ததாக வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கை விடாமல் கிளறி விடவும்.
- 2 நிமிடங்களில் கெட்டியாக மாறும் போது, கரைத்து வைத்த வெள்ளப் பாகை வடிக்கட்டி சேர்த்துக்கொள்ளவும். பின்னர், இதனை 5 நிமிடங்களுக்கு கை விடாமல் கிளறவும். பின்னர், கொஞ்சமாக நெய் சேர்த்து மீண்டும் வதக்கவும். இறுதியாக, நெய்யில் வறுத்து வைத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் உக்காரை ரெடி.
டிப்ஸ்:
- பருப்பு எடுத்த அதே கப் அளவை மற்ற பொருட்களுக்கும் பயன்படுத்தவும்.
- நெய்யில் தேங்காய்யை வறுப்பதால், ஃபிரிட்ஜில் இந்த இனிப்பை வைக்கும் போது 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
- வேகவைத்த பாசிப்பருப்பை மசித்து சேர்க்க வேண்டாம்.