இயற்கை எழில் கொஞ்சும் இடமும், கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவிற்கு செல்ல விருப்பமில்லாதவர்கள் யாரேனும் இருப்பார்களா? குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு பிளான் போட்டால், அதில் கேரளா இல்லாமல் கடந்து செல்வது கடினம். மூணாறு, வர்க்கலா என கேரளா என்றவுடன் இந்த வழக்கமான இடங்களுக்கு செல்லாமல் இம்மூறை கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று உங்கள் பொன்னான நேரத்தை செலவிடுங்கள்..
1.பொன்முடி (Ponmudi hills):திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்முடி எந்த நேரத்திலும் சுற்றிப்பார்க்க ஏற்ற மலைவாசஸ்தலமாகும். மலைகளும் மரங்களும் திரும்பிய பக்கம் எல்லாம் சூழ, பசுமையும் குளிர்ந்த காற்றும் நமது மனதை புத்துணர்ச்சியடையச் செய்யும். மலையில் உள்ள விதவிதமான மலர்கள், வண்ணத்துப்பூச்சிகள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் மக்களை ஆசையாக வரவேற்கும். பொன்முடி செல்பவர்கள் புதிய அனுபவத்தை பெற்று திரும்புவது உறுதி. ட்ரெக்கிங் செய்ய ஆர்வம் உடையவர்கள் கண்டிப்பாக பொன்முடிக்கு சென்று வரலாம்.
2.சைலண்ட் வேலி (Silent Valley):பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா தான் இந்த சைலண்ட் வேலி. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாக இருக்கும் சைலண்ட் வேலியை நடைபயணமாக சென்று ரசிக்க சிறந்த இடம். காடுகளின் அழகை ரசிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக செல்லுங்கள்
3.நெல்லியம்பதி (Nelliyampathy):சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் நெல்லியம்பதி மலைகள் காட்சியளிக்கிறது. தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஏலக்காய் தோட்டங்களால் நிறைந்திருக்கும் நெல்லியம்பதி வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு வாழ்விடமாக இருக்கிறது. கண்டிப்பாக கண்களுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியூட்டும் இடமாக இது இருக்கும்.