புதுடெல்லி:இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் கொடுப்பதன் பின்னணி குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அந்த நாட்டின் வரிகள் மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
புளோரிடாவின் மார்-எ-லாகோ ரிசார்ட்டில் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,"இந்தியாவிடம் அதிக பணம் உள்ளது. அப்படியிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர் நாங்கள் தர வேண்டும்? இந்த விஷயத்தில் நம்மை விடவும் அதிக வரியை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
அவர்களின் வரிகள் மிகவும் அதிகம் இருக்கிறது என்பதால் அதில் இருந்து நமக்கு கொஞ்சம் தான் கிடைக்கிறது. நான் இந்தியாவின் மீதும் அவர்களின் பிரதமர் மீதும் அளவு கடந்த மரியாதை வைத்திருக்கின்றேன். ஆனால், 21 மில்லியன் டாலர் கொடுப்பது என்பது," என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு வாக்கின் சதவிகிதத்தை அதிகரிப்பதற்காக 21 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படுவதை அமெரிக்க அரசின் திறன் துறையானது ரத்து செய்த சில நாட்கள் கழித்து இந்த விமர்சனத்தை டிரம்ப் முன் வைத்துள்ளார். எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் திறன் துறையானது கடந்த 16ஆம் தேதி இந்தியாவுக்கு வழங்கும் நிதி உதவியை ரத்து செய்தது.
இதையும் படிங்க:"தமிழை காக்க உயிரை கொடுக்க தயாராக உள்ளோம்"; திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஆவேசம்!
இது குறித்து வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், பல்வேறு வெளிநாடுகளுக்கு உதவும் திட்டம் தேவையற்றது என்று அமெரிக்க அரசின் திறன் துறை கூறியிருந்தது. "அமெரி்க்கர்கள் வரியாக அளிக்கும் டாலர்களை கீழ் கண்ட வகைகளில் செலவிடப்படுவது அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது," என அமெரிக்க திறன் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வங்கதேசத்தின் அரசியல் பரப்பை வலுப்படுத்துவதற்கான 29 மில்லியன் டாலர் நிதி உதவி, இந்தியாவின் வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதற்கான 21 மில்லியன் டாலர் நிதி உதவி உளிட்டவை ரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கிறது என்று தொடர்ந்து பாஜக குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்காவின் முடிவு குறித்து எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள சமூக ஊடக தலைவர் அமித் மாளவியா, "வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதற்காக 21 மில்லியன் டாலர் அமெரிக்க நிதி உதவியா? இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் வெளி சக்திகள் இருப்பது தீர்மானமாக தெரிய வருகிறது. இதனால் பலன் அடைந்தவர்கள் யார்? ஆனால் ஆளும் கட்சி இதனால் பலன் அடையவில்லை என்பது உறுதி," என்று கூறியிருந்தார்.
பாஜக முன்னாள் அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், "ஜனநாயகத்துக்கு குறைவை ஏற்படுத்தும் இடையூறு நடந்திருப்பது தெளிவாக தெரிய வருகிறது. ஜனநாயக மதிப்பீடுகள் குறித்து பேசும் அதே நேரத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஜனநாயக நாடுகளுக்கு குறைவை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். வெளி சக்திகளின் நிதி உதவி, வெளி சக்திகள் இதன் பின்னணியில் உள்ளன என்பது மீண்டும் தெரியவந்திருக்கிறது. அமெரிக்க நிதி உதவியில் யார் என்ன செய்தனர் என்பது குறித்து இந்தியாவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்,"என்று கூறியிருந்தார்.