கொழும்பு: இலங்கையின் பசுமை எரிசக்தி திட்டத்தில் இருந்து அதானி குழுமம் விலகுவதாக கூறியதால் எந்த ஒரு வருத்தமும் இல்லை என்று அதிபர் அனுரா குமார திசநாயக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் பசுமை எரிசக்தியில் 400 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வதில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அதானி குழுமம் அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டின் நிதி நிலையை அறிக்கையை தாக்கல் செய்த அதிபரும், நிதி அமைச்சருமான திசநாயக, "காற்றாலை மின் சக்தி 4.65 அமெரிக்கா சென்ட்டுக்கு நமக்கு கிடைக்கும் போது, 8.2 அமெரிக்க சென்ட்டுக்கு தரும் வாய்ப்பை இழந்ததில் நமக்கு ஏன் வருத்தம் இருக்கப் போகிறது.?"என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதானி பசுமை எரிசக்தி நிறுவனம் என்ற பெயரை அவர் குறிப்பிடவில்லை.
திசநாயக அரசின் கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவதாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் இது குறித்து பேசிய திசநாயக, "நாட்டில் இருந்து முதலீட்டாளர் விலகி விட்டதாக புலம்புகின்றனர்,"என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் டெல்சா நிறுவனத்துக்கு ஆட்தேர்வு...பிரதமர் மோடி-எலான்மஸ்க் சந்திப்பை தொடர்ந்து வந்த அறிவிப்பு!
இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற அனுரா குமார திசநாயக, அதானி காற்றாலை மின் திட்டம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும், மின்சக்தி கொள்முதல் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டிசம்பர் மாதம் கடைசியில் கூறியிருந்தார். மேலும் இந்த திட்டத்துக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் சுற்றுச் சூழல்வியலாளர்கள் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். அவர்கள் தாக்கல் செய்த வழக்கில் இடம் பெயரும் பறவைகளுக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே, தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் அதானி குழுமத்தின் திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திசநாயக கூறியிருந்தார். இந்த நிலையில் அதானி நிறுவனம், கொழும்பு துறைமுகத்தில் கண்டெய்னர் முனையத்தை முன்னெடுப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவடைய உள்ளது.