தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் ஜெட் விமானம் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்து...பயணிகள் 64 பேரின் நிலை என்ன? - WASHINGTON DC PLANE CRASH

60 பயணிகள், 4 விமான ஊழியர்களுடன் வாஷிங்டன் ரீகன் விமானநிலையத்தில் இறங்குவதற்கு முன்னதாக நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபடும் வாகனங்கள்
விமான விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபடும் வாகனங்கள் (Image credits-AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 1:02 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே உள்ள ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் 60 பயணிகள், நான்கு விமான ஊழியர்களுடன் தரை இறங்க முயன்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் போட்டோமேக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மீட்பு பணி:நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதிய நிலையில் விமான நிலையத்துக்கு அருகே உள்ள போட்டோமேக் ஆற்றில் விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் நிலை குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. இந்த விபத்தை அடுத்து ரீகன் விமானநிலையத்துக்கு வரும், புறப்படும் விமானங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் கொண்ட தேடுதல் ஹெலிகாப்டர்கள் மட்டும் விமான நிலையத்துக்கு அருகே மீட்பு பணியில் ஈடுபட்டன.

விமான நிலையம் அருகில் உள்ள போட்டோமேக் ஆற்றில் பயணிகள் விழுந்திருக்கிறார்களா? என படகு மூலமும் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப், "எதனோடும் ஒப்பிட முடியாத மோசமான விபத்து, விபத்துக்கு உள்ளான விமானத்தில் இருந்த பயணிகளுக்கு கடவுள் துணை இருக்கட்டும். விபத்து நடைபெற்ற உடன் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் பணி என்பது அளவிடமுடியாத ஒன்று. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன். மேலும் தகவல்கள் விரைவில் தெரிய வரும்" என்று கூறியுள்ளார்.

64 பேருடன் சென்ற விமானம்:இந்த நிலையில் விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், கான்சாசின் விச்சிதாவில் இருந்து வாஷிங்டன் வந்து கொண்டிருந்த அமெரிக்கன் ஈகிள் பிளைட் 5342 விமானம் விபத்துக்கு உள்ளானது. அதில் 60 பயணிகள் பயணித்தனர். நான்கு விமான ஊழியர்களும் இருந்தனர்," என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்துறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக நடுவானில் இந்த விபத்து அமெரிக்க நேரப்படி இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு) நேரிட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் அதிக கண்காணிப்பு கொண்ட வான்வெளி, கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட விமான நிலையமாக கருதப்படும் ரீகன் விமான நிலையம் வெள்ளை மாளிகையில் இருந்து மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது.

விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை அறிய விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் ஏதும் கிடைக்கிறதா? என்பதை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 5342 என்ற விமானம் ரீகன் தேசிய விமான நிலையத்தில் இறங்கும் முன்பு 400 அடி உயரத்தில் மணிக்கு 140 மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது என விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

30 வினாடிகளுக்கு முன்பு விபத்து:விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜெட் விமானத்தை ஓடுபாதை எண் 33ல் இறங்கும்படி அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து ஓடுபாதை எண் 33 நோக்கி ஜெட் விமானம் வந்து கொண்டிருந்தது. தரை இறங்குவதற்கு 30 விநாடிகளுக்கு முன்பு ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்கு உள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்பு ராணுவ ஹெலிகாப்டரின் பைலட்டுடன் பேசிய விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஊழியர், நீங்கள் வரும் பாதையில் ஒரு ஜெட் விமானம் தரையிறங்க உள்ளது. அது உங்களுக்கு தெரிகிறதா? என்று கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு சில நொடிகள் கழித்து ராணுவ ஹெலிகாப்டரின் பின்னால் ஜெட் விமானம் மோதி விட்டது. இதனால் ரன்வேயில் இறங்கும் முன்பு 2400 அடி உயரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. தோராயமாக ஆற்றின் நடுவில் விழுந்தது என்பது தெரிய வந்துள்ளது.

பயிற்சி ஹெலிகாப்டர்: நடுவானில் நேரிட்ட இந்த விபத்தில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விமானத்தில் பயணித்தவர்கள் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என்பதை அறிய மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து பேசிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, "இந்த விபத்து ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் அனைவருக்கும் இது ஒரு சிக்கலான தருணம்,"என்று கூறினார்.

விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒரு பயிற்சி ஹெலிகாப்டர் என தெரிய வந்துள்ளது. இது வர்ஜீனியாவின் ஃபோர்ட் பெல்வோயர் தளத்தை சேர்ந்ததாகும். பிளாக்ஹாவ்க் என்ற இந்த ஹெலிகாப்டர், அரசின் திட்டமிடல் பணிக்காக தேசிய தலைநகரை சுற்றி உள்ள கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளிகள், நெருக்கடியான வான்வெளிகளை சுற்றி பயணித்து அடிக்கடி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.

ABOUT THE AUTHOR

...view details