வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அதிரடியாக அறிவித்த ஜோ பைடன், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸை அறிவிக்க தமது ஆதரவை தெரிவி்த்தார்.
இதையடுத்து அவரை அதிபர் வேட்பாளராக அறிவிக்க ஜனநாயக கட்சிக்குள் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறதாக தெரிகிறது. இதன் காரணமாக, கமலா ஹாரீஸ் விரைவில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்துக்கு உட்பட்ட மில்வாக்கில் தமது தேர்தல் பிரச்சாரத்தை கமலா ஹாரீஸ் செவ்வாய்க்கிழமை துவங்கினார். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கமலா ஹாரீஸ் உரையாற்றினார்.
அப்போது அவர், " நாங்கள் (ஜனநாயக கட்சியினர்) மக்களின் பேராதரவோடு தேர்தல் பிராச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், 24 மணி நேரத்தில் தேர்தல் நிதி திரட்டி சாதித்த வரலாறு எங்களுக்கு உண்டு. வெகுஜன மக்களின் ஆதரவால்தான் இந்த சாதனை எங்களுக்கு சாத்தியமாகிறது. இதற்கு கைமாறாக, அதிபர் தேர்தலில் வென்று, ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்தால், அது மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக இருக்கும்" என்று கமலா ஹாரீஸ் பெருமிதத்துடன் கூறினார்.
பிரசாரத்தில் அவர் மேலும் பேசும்போது, "மாறாக, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்,, தேர்தல் பிரச்சார நிதிக்காக எண்ணெய் நிறுவன உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் என கோடீஸ்வரர்கள் மற்றும் பெருநிறுவனங்களை நம்பி உள்ளார். மேலும் அவரது கொள்கைகள் நடுத்தர மக்களின் நலன்களை சிதைப்பாகவே உள்ளன. வெகுஜன மக்களுக்கான மருத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சியில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும். குழந்தைகள் யாரும் வறுமையோடு வளராத நிலை உருவாக்கப்படும்" என்று கமலா ஹாரீஸ் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: போட்டியாளர்களை ஊதித் தள்ளிய கமலா ஹாரீஸ்! அதிபர் வேட்பாளர் ஆவது உறுதி!