காத்மாண்டு (நேபாளம்):இந்தியர்கள் உட்பட 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேபாள தலைநகர் காத்மாண்டு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மர்சங்டி ஆற்றில் தலைக்கீழாக கவிழந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று (UP FT 7623) நேபாளத்தின் பிரபல சுற்றுலா தலமான பொக்காரா நகரில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி இன்று காலை பயணித்து கொண்டிருந்தது.
தனாஹுன் மாவட்டத்துக்குட்பட்ட ஐனா பஹாரா என்ற இடத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மர்சங்டி ஆற்றில் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை நேபாள நாட்டின் காவல் துறை உறுதி செய்துள்ள நிலையில், இதில் குறைந்தது 11 பயணிகள் இறந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நாட்டின் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தைச் சேர்ந்த 45 பேர் கொண்ட ஆயுதப்படை காவலர்கள் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை 10 முதல் 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் (ஜூலை), 65 பயணிகளுடன் பயணித்த இரண்டு பேருந்துகள் நேபாளத்தின் ஸ்வாலன் (Swollen River) நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈராக்கிற்குச் சென்ற அர்பயீன் யாத்ரீகர்களின் பேருந்து விபத்து; 28 பேர் உயிரிழப்பு!