ஸ்டாக்ஹோம்:2024 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுகளுக்கிடையே உள்ள வளங்களில் உள்ள வேறுபாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக இம்மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
"ஒரு நாட்டின் வளமைக்கு சமூக நிறுவனங்களின் முக்கியத்துவம் குறித்து மூன்று பொருளாதார வல்லுநர்களும் தங்களது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்" என்று நோபல் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
"சட்டத்தின் மோசமான ஆட்சியைக் கொண்ட சமூகங்கள் மற்றும் பொதுமக்களை சுரண்டும் நிறுவனங்கள் அந்த சமூகத்தில் வளர்ச்சியையோ, சிறந்த மாற்றத்தையோ உருவாக்காது. இது ஏன் என்பதை இப்பொருளாதார நிபுணர்களின் ஆராய்ச்சியில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது" என்றும் நோபல் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
டேரன் அசெமோக்லு மற்றும் சைமன் ஜான்சன் ஆகியோர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகின்றனர், ஜேம்ஸ் ஏ.ராபின்சன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.