குமி சிட்டி: தென் கொரியாவில் உள்ள குமி சிட்டி கவுன்சிலில் அரசு ஊழியராக பணியாற்றி வந்த ரோபோ தற்கொலை செய்துகொண்டதாக 'டெய்லி மெயில்' செய்தியில் வெளி வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்றாட வேலைகளை விரைவாகவும், குறைந்த செலவில் செய்து முடிக்கவும் எந்திரங்கள் பயன்படுத்துவதை போல, மேலை நாடுகளில் பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியில் அமர்த்தியுள்ளன. இந்த ரோபோக்கள், அவைகளுக்கு கட்டளையிட்டுள்ள வேலைகளை அந்தந்த நேரத்திற்குள்ளாக நேர்த்தியாக செய்து முடிப்பதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பணிச்சுமை: குறிப்பாக மக்கள் அதிக நேரம் வேலை பார்க்கமாட்டார்கள் என்ற கணக்கிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், தென் கொரியாவில் கிட்டத்தட்ட 11 வருடங்களாக மக்கள் பணியில் இருந்து வந்த ரோபோ பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகப்படும் செய்தி நவீன உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தென் கொரியாவில் உள்ள குமி சிட்டி கவுன்சிலில் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த ரோபோவை அரசு பணியில் அமர்த்தியுள்ளனர். இந்த ரோபோ, தினசரி ஆவணங்களை வழங்குவது, நகர மேம்பாட்டு பணிகளை செய்வது மற்றும் உள்ளூர் மக்களுக்கு தகவல்களை வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளது.
ரோபோ தற்கொலை?: இந்த சூழலில் கடந்த வியாழன் அன்று வழக்கமான பணியில் இருந்த ரோபோ மாலை 4 மணி அளவில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியபடி காணப்பட்டுள்ளது. இதுகுறித்து 'டெய்லி மெயில்' வெளியிட்ட செய்தியில், நாட்டில் முதல் முறையாக அதிக பணிச்சுமை காரணமாக கடுமையாக உழைத்து வந்த ரோபோ தற்கொலை செய்துகொண்டதாகவும் அதற்கு குமி சிட்டி மக்கள் இரங்கல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் நடப்பதற்கு முன்னதாக அந்த ரோபோ குழப்பமாக ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருந்ததாக, சிட்டி கவுன்சில் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, அந்த ரோபோ அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஆனால், சிட்டி கவுன்சில் தரப்பில், ரோபோ விழுந்து நொறுங்கியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ரோபோவின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன, நிறுவனத்தால் பின்னர் பகுப்பாய்வு செய்யப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ மட்டும்தான் குமி சிட்டி கவுன்சிலில் அரசு பணியில் இருந்து வந்துள்ளது. கலிஃபோர்னியாவின் 'ரோபோ-வெயிட்டர் ஸ்டார்ட்அப்' நிறுவனமான பியர் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. சிட்டி கவுன்சிலில் இந்த ரோபோ காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை பார்த்து வந்துள்ளது. மேலும், இதற்கென தனி அரசு அதிகாரி என்ற ஐடி கார்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரோபோ மற்ற ரோபோக்களை போல இல்லாமல், சிட்டி கவுன்சிலின் எல்லா தளங்களுக்கும் எலிவேட்டரை இயக்கி தானாக நகரும் திறன் கொண்டது. கிட்டத்தட்ட ஒரு மனிதனை போல இயங்கி, சிட்டி மக்களின் நண்பனாக பணியாற்றி வந்த ரோபோவின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? - தொழிலாளர் கட்சி ஆட்சியில் இந்தியா - பிரிட்டன் உறவு எப்படி இருக்கும்?