தைபே: தைவானில் சீன ராணுவத்தைச் சேர்ந்த 10 போர் விமானங்கள் மற்றும் சீனாவின் கடற்படையை சார்ந்த 5 கப்பல்கள் எல்லை தாண்டி நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவான் மீது நீண்ட காலமாக அதிகார போக்கை காட்டி வரும் சீனா அவ்வப்போது தனது ராணுவ விமானங்களையும், கப்பல்களையும் தைவானில் நிலைநிறுத்தி வருகிறது. தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று சீனா கருதுவதாலும், அந்த கோட்பாட்டை தைவான் ஏற்காததாலும் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சீனா ராணுவத்தின் 10 போர் விமானங்கள் மற்றும் கடற்படையை சேர்ந்த 5 கப்பல்கள் இன்று காலை 6 மணி வரை தைவானை சுற்றி வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், '' சீனாவின் 10 போர் விமானங்களில் எட்டு, தைவானின் இடைநிலை கோட்டை கடந்து தென்மேற்கு மற்றும் கிழக்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்துக்குள் நுழைந்துள்ளன. நாங்கள் தொடர்ந்து அதன் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். அதேகேற்ப பதிலடி கொடுப்போம்'' என குறிப்பிட்டுள்ளது.