கொழும்பு:இலங்கை அதிபர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இலங்கை தலைமை தேர்தல் அணையர் ரத்னநாயக்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேட்புமனுத் தாக்கல், மனுக்கள் மீதான பரிசீலனை, வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி, பிரசார தொடக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரனில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் அவரது ஆதரவாளர் அதிபர் தேர்தலில் ரனில் விக்ரமசிங்கே புதிய சின்னத்தில் களம் காணுவார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது. அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்தன.
இதையடுத்து அதிபர் ராஜபக்சேவுக்கு எதிரான ஒன்று திரண்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அதைத் தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் அதிபராக பொறுப்பேற்ற ரனில் விக்ரமசிங்கே கடும் போராட்டத்திற்கு பின்னர் இலங்கையில் தற்போது மீண்டும் சகஜ நிலை திரும்பி உள்ளது.