கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 38 வேட்பாளர்கள் களம் காணும் இந்த இலங்கை அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் சுயேட்சை வேட்பாளராக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே (75), தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமாரா டிசாநாயகே (56) மற்றும் சமாகி ஜனா பாலவேகயா கட்சியின் சஜித் பிரேமதசா (57) ஆகியோர் களம் காண்கின்றனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறிய போது, அதாவது கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை கடும் பொருளாதார சரிவைச் சந்தித்தது. இதன் பிறகு இலங்கை அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே பொருளாதாரச் சீரமைப்பை முன்னெடுத்தார். இதுவே உலக அளவில் மிகவும் வேகமாக பொருளாதாரத்தை முன்னோக்கிச் சென்ற நிகழ்வு என சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். எனவே தான், இந்த முறை இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களின் பிரச்னையை முன் வைக்காமல், நாட்டின் பொருளாதாரத்தை மும்முனை தரப்பும் பிரச்சாரத்தில் வைத்தது.
இதையும் படிங்க:இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் முதல் தமிழர்.. களத்தில் இருந்து ஈடிவி பாரத் ஸ்பெஷல் ரிப்போர்ட்
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள்: அதிபர் பதவிக்கு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்தனர். இதன்படி, இலங்கைஅதிபர் தேர்தலில் ஒரு தமிழர் பொது வேட்பாளராக களமிறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த நிலையில், இலங்கை வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் இலங்கை அதிபர் தேர்தலில் 17 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்களாக உள்ளனர். மொத்தம் 13 ஆயிரத்து 400க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமான அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் அதிபர் தேர்தலுக்காக 60 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வாக்குப்பதிவு நிறைவு:காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று மாலை 6 மணிமுதல் எண்ணப்படவுள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு நாளை பிற்பகலில் முடிவுகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.