தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கிறிஸ்துமஸ் சந்தைக்குள் காரை ஏற்றி வன்முறை... இருவர் பலி, பலர் கவலைக்கிடம்.. எலான் மஸ்க் காட்டம்! - GERMANY CHRISTMAS MARKET ATTACK

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கூடியிருந்த பொதுமக்கள் மீது காரை ஏற்றி இருவரை கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.

வன்முறை வீடியோ காட்சி, எலான் மஸ்க் (கோப்புப்படம்)
வன்முறை வீடியோ காட்சி, எலான் மஸ்க் (கோப்புப்படம்) (credit - ETV Bharat, @elonmusk x page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

Updated : 6 hours ago

மாக்டேபர்க்:உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்த மாத தொடக்கம் முதலே பண்டிகை ஃபீவர் ஒட்டிக்கொண்டது. குறிப்பாக ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வியாபார ரீதியாகவும் களைகட்டும்.

அந்த வகையில், சுமார் 240,000 மக்கள் வசிக்கும் மாக்டேபர்க் நகரில், கிறிஸ்துமஸ் சந்தைகள் அமைக்கப்பட்டு, வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பண்டிகை பொருட்களை வாங்கி செல்வார்கள். அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணி அளவில் மாக்டேபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

அப்போது, கூட்டத்தை பிளந்து வேகமாக வந்த கருப்பு நிற கார் ஒன்று அங்கிருந்த மக்கள் மீது மோதி சில தூரம் வரை சென்று நின்றது. கார் மோதியலில் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 60 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாகவும் மாக்டேபர்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவரை போலீசார் கத்தி முனையில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

சவூதி நபர்

விசாரணையில், அந்த நபர் சவூதியை சேர்ந்ததாகவும், கடந்த 2006 இல் ஜெர்மனிக்கு குடிபெயர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், 50 வயதான அந்த நபர் மாக்டேபர்க் நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெர்ன்பர்க்கில் கிளினிக் நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவம் குறித்து சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தமரா ஜிஸ்சாங், இந்த சம்பவம் மாக்டேபர்க் நகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வன்முறையை நிகழ்த்தியவர் தனி நபர் ஆவார். அதனால் பெரிய ஆபத்து ஏதுமில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினின் கிறிஸ்துமஸ் சந்தையில் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஒரு டிரக்கை ஓட்டி வந்து கூட்டத்தில் மோதி 13 பேரை கொன்றார். அந்த சம்பவத்துக்கு பிறகு இது இரண்டாவது நிகழ்வாகும்'' என்றார்.

கிறிஸ்துமஸ் சந்தைகள் ஜெர்மன் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. பெர்லினில் மட்டும், கடந்த மாத இறுதியில் 100க்கும் மேற்பட்ட சந்தைகள் திறக்கப்பட்டன. இவற்றில் ஒயின், வறுத்த பாதாம் மற்றும் பிராட்வர்ஸ்ட் (தொத்திறைச்சி) ஆகியவை முக்கிய சந்தை பொருளாக உள்ளன. இங்கிருந்து பல இடங்களுக்கு இவைகள் விநியோக்கிப்பட்டும் வருகிறது.

'திட்டமிட்ட படுகொலை'

கிறிஸ்துமஸ் பண்டிகையோயொட்டி கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த ஜெர்மன் அமைச்சர் நான்சி ஃபேசர், '' இந்த முறை கிறிஸ்துமஸ் சந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான உறுதியான அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால் விழிப்புடன் இருப்பது புத்திசாலித்தனம்'' என கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், மாக்டேபர்க் சந்தையில் பொதுமக்கள் மீது கார் மோதும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் தலைவரும், அமெரிக்க அரசாங்க சிறப்புத் திறன் துறை தலைவருமான எலான் மஸ்க், '' இது ஒரு திட்டமிட்ட படுகொலை '' என குற்றம்சாட்டியுள்ளார்.

Last Updated : 6 hours ago

ABOUT THE AUTHOR

...view details