வில்மிங்டன்:அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான 'குவாட்' (QUAD) முன்னெப்போதையும் விட வலுவானதாக உருவெடுத்துள்ளதாக 'குவாட்' உச்சி மாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 'குவாட்' என்ற பெயரில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நீண்ட கால இந்த முன்மொழிவுக்கு கடந்த 2017ல் செயல் வடிவம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு 4வது 'குவாட்' உச்சி மாநாடு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நேற்று நடைபெற்றது.
இதில், ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்குப் பிறகு குவாட் கூட்டமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; உத்திகள் ரீதியாக 'குவாட்' சீரமைக்கப்பட்டு முன்னெப்போதையும் விட வலுவானதாக திகழ்கிறது.
'குவாட்' இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு உண்மையான, நேர்மறையான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் நன்மைக்கான சக்தியாகும். இப்பிராந்தியத்தில் நான்கு முன்னணி கடல்சார் ஜனநாயக நாடுகளாக, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் இன்றியமையாத அங்கமாக மற்றும் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி 'குவாட்' திகழ்கிறது.