டெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு பிராந்தியத்தில் உள்ள புருனே நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இதன் மூலம் 40 ஆண்டுகளாக இந்தியா - புருனே இடையே இருந்து வரும் நட்புறவு மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், புருனே நாட்டிற்குச் செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று புருனே வந்தடைந்தார். இதானையடுத்து, “நான் (நரேந்திர மோடி) முதல்முறையாக புருனே தருசலாமிற்குச் சென்றுள்ளேன். இந்த நேரத்தில் 40 வருட இருநாட்டு உறவால் மகிழ்ச்சி அடைகிறோம். ராயல் குடும்பத்தின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் இதர உறுப்பினர்களையும் சந்தித்து வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வேன்” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது இந்தியா - புருனே இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, ஆற்றல், விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு, கலாச்சாம் ஆகியவை மேம்படும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.