கீவ் (உக்ரைன்):தமது போலந்து பயணத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் சென்றடைந்தார். இதன் மூலம், 1991 இல் அந்நாடு சுதந்திரம் அடைந்ததி்ல் இருந்து உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
போலந்து மற்றும் உக்ரைனுக்கு பிரதமர நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் போலந்து பயணத்தை முடித்த மோடி், தமது இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக இன்னும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள உக்ரைன் நாட்டுக்கு இன்று சென்றடைந்தார்.
கடந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவுக்கு மோடி மேற்கொண்ட பயணம், அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள சில மேலை நாடுகள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தற்போது உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமது இந்தப் பயணத்தில் இந்தியா - உக்ரைன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜெலன்ஸ்கியுடன் மோடி அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ரஷ்யா -உக்ரைன் இடையே நீண்டு கொண்டிருக்கும் போருக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான யோசனைகளை மோடி, ஜெலன்ஸ்கியிடம் தனிப்பட்ட முறையில் எடுத்துரைப்பார் என்றும் தெரிகிறது.
முன்னதாக, போலந்தில் இருந்து பிரத்யேக ரயிலில் ( 'Rail Force One') 10 மணி நேரம் பயணித்து உக்ரைன் சென்றடைந்த பிரதமர் மோடியை, தலைநகர் கீவ்வில் அதிபர் ஜெலன்ஸ்கி ஆரத்தழுவி வரவேற்றார். அத்துடன் அங்கு கூடியிருந்த இந்திய சமூகத்தினரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்த உக்ரைனிய குழந்தைகளின் நினைவாக, உக்ரைன் தேசிய அருங்காட்சியகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தில் இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். ஏ.வி.ஃபோமின் தாவரவியல் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் மோடி மலரஞ்சலி செலுத்தினார்.
மூன்று ஒப்பந்தங்கள்:இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் மருத்துவம், விவசாயம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தியா - உக்ரைன் இடையே முக்கியமான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது போர் தொடுத்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்காத நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்கரீதியான முன்னெடுப்புகள் மூலம் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும்படி இந்தியா அறிவுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வங்கதேச வெள்ளப்பெருக்கிற்கு இந்தியா காரணமா? மாணவர்கள் குற்றச்சாட்டுக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கம்!