மாஸ்கோ (ரஷ்யா):இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை தலைநகர் மாஸ்கோவில் இன்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, "இந்தியா -ரஷ்யா இடையே கடந்த 25 ஆண்டுகளில் 22 முறை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாம் 17 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளோம். இதுவே இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவின் ஆழத்தை உணர்த்துவதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தாலும், தற்போதைய இந்த சந்திப்பில் பேசப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் ஒட்டுமொத்த உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது" என்று ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி எடுத்துரைத்தார்.
மேலும் அவர் பேசும்போது, "கரோனா, போர் என கடந்த ஐந்தாண்டுகளில் உலக நாடுகளும், மனித இனமும் பல்வேறு இன்னல்களை சந்தித்துவிட்டது. இவற்றின் விளைவாக உணவு, எரிபொருள் மற்றும் உரங்கள் தட்டுப்பாட்டை உலகம் எதிர்கொண்டது. அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும், இந்தியா- ரஷ்யா இடை.யேயான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பயனாக, உரத் தட்டுப்பாட்டை சந்திக்காமல், நம் நாட்டு விவசாயிகளை காக்க முடிந்தது. விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர வேண்டும்" என்று புதினிடம் மோடி கேட்டு கொண்டார்.
அத்துடன், "எரிபொருட்கள் தேவை என்பது உலகின் முன்னுள்ள சவாலாக இருந்த காலத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்தது. சாமானிய மக்களுக்கு பெட்ரோல், டீசல் சிரமமின்றி கிடைக்கவும், எரிபொருட்களின் விலையை நிலையாக வைக்கும் நோக்கிலும் இந்த முடிவை இந்தியா எடுத்து அதனை செயல்படுத்தியது. கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையேயான ஒப்பந்தத்தை உலக நாடுகள் ஏற்றுகொண்டால், அது உலக கச்சா எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு மறைமுகமாக உதவும் " என்றும் புதின் உடனான தமது பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி கூறினார்.
உக்ரைன் குறித்த பேச்சு: ரஷ்யா - உக்ரைன் போர் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் தங்களது இன்றைய சந்திப்பின்போது வெளிப்படையாக தங்களது கருத்தை எடுத்துரைத்தனர். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மோடி, "ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி திரும்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது" என்று ரஷ்ய அதிபர் புதினிடம் உறுதியளித்தார்.
"இந்த விவகாரத்தில் உங்களின் (புதின்) நேர்மறையான கருத்துகளை கேட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா எப்போது அமைதி பக்கம் தான் என்பதை உங்களுக்கும் பிற உலக நாடுகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த விவகாரம் குறித்த உங்களின் நேர்மறையான எண்ணங்களை அறிந்த பின்பு இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று புதின் உடனான உரையாடலின்போது பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க:"இந்திய பிரதமர் மோடியின் செயல் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம்!