இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது பணியில் இல்லாத காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து டிஐஜிகள், ஏஐஜிக்களுக்கும் காவல்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் கடந்த நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பாகிஸ்தானில் ஆட்சியில் உள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் நவாஸ் கட்சிக்கு எதிராக கருத்துக்களை வைத்து வரும் இம்ரான் கான், நவம்பர் 24 அன்று நாடு தழுவிய போராட்டங்களுக்கு கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.
அதன்படி, நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை இஸ்லாமாபாத்தில் பெரிய போராட்டம் வெடித்தது. மூன்று நாட்கள் நீடித்த அந்த போராட்டத்தில் ஒரு காவலர் மற்றும் மூன்று ரேஞ்சர்ஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பலர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.