ஒட்டாவா:காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பிருப்பதாக வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும், உளவு தகவல்களை வைத்தே இந்தியாவை குற்றம் சாட்டியதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்தியா முழுமையாக மறுத்து வருகிறது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் குறித்து பொது வெளியில் பேசுவதை விடுத்து, உரிய ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்று கனடாவிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் காரணமாக அண்மையில் இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டாட்சி தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் வெளிநாட்டு தலையீடுகள் பற்றிய பொது விசாரணையின் முன் சாட்சியமளித்த ட்ரூடோ, "இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அதிருப்தியுடன் செயல்படும் கனடா நாட்டவர் குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் சேகரித்தனர். இந்திய அரசின் உயர் மட்டத்திலும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கூலிப்படை கும்பலுக்கும் அந்த தகவலை அவர்கள் தெரிவித்தனர். கனடாவின் மண்ணில் கனடா குடியுரிமை பெற்ற ஒருவரை கொன்றதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருக்கிறது என கனடா உளவு துறை அளித்த தகவல்களை கூறினேன். இதனை எனது அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்திய தரப்பில் ஆதாரங்கள் கேட்கின்றனர். இந்திய பாதுகாப்பு முகமைகளிடம் இருக்கிறது என்று கூறினோம். மீண்டும் ஆதாரங்கள் தேவை என்று இந்தியா அழுத்தம் கொடுத்தது. இது உளவுத்துறையின் முதன்மையான தகவல் மட்டுமே. வலுவான ஆதாரம் இல்லை என்று கூறினேன்," என்று குறிப்பிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்