காத்மாண்டு (நேபாளம்):நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ கடந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்கள் நீரில் தத்தளித்து வருகிறது.
அந்த வகையில், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் வெள்ளப்பெருக்கு மட்டும் அல்லாது, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 112-ஆக இருந்த நிலையில், இன்று (செப்.30) 170-ஐக் கடந்ததாகவும், 42 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.