கைரோ: ஆண்டுதோறும் சவுதி அரேபியாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாமியர்கள் குறிக்கோளாக கொண்டு இருக்கின்றனர். இந்த வருடமும் ஏறத்தாழ 18 லட்சம் மக்கள் இதுவரை ஹஜ் புனிதன் யாத்திரைக்காக சவுதி அரெபியா சென்றுள்ளனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள உஷ்ணம் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடும் வெயில் காரணமாக நாவறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகும் மக்கள் சுருண்டு விழுந்து உயிரிழக்கின்றனர்.
இந்த ஆண்டில் மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் ஆயிரத்து 300 பேர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக சவுதி சுகாதார அமைச்சர் பஹித் பின் அப்துர் ரஹ்மான் தெரிவித்து உள்ளார். இதில் 83 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்காவுக்கு நீண்ட பயணம் மேற்கொண்ட போது மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கால நிலை மாற்றத்தால் வரலாறு காணாத வகையில் கடும் உஷ்ணம் நிலவுவதாகவும், வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்த 95 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். அதில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் வான் போக்குவரத்து மூலம் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.