லண்டன்:பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லசை, கெய்ர் ஸ்டார்மர் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, பிரிட்டனின் புதிய பிரதமராக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு நேற்று (ஜுலை 4) நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாக தொடங்கின. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே தொழிலாளர் கட்சியே பெரும்பாலான தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியதும், 61 வயதான கெய்ர் ஸ்டார்மர், தமது மனைவி விக்டோரியாவுடன் பிரிட்டன் அரண்மனைக்கு விரைந்து, மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார்.
"நீங்கள் யாராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையை நீங்கள் எங்கே தொடங்கி இருந்தாலும், கடினமாக உழைத்தால் அதற்கான பலனை இந்த தேசம் உங்களுக்கு நிச்சயம் ஓர்நாள் அளிக்கும். உங்களின் உழைப்புக்கு இந்த நாடு நிச்சயம் மரியாதை கொடுக்கும். நம்மை பெருமைப்படுத்திய தேசத்துக்கு நாம் ஏதேனும் திருப்பி கொடுக்க வேண்டும்" என்று பிரதமராக அறிவிக்கப்பட்டதும், ஆற்றிய தமது முதல் உரையில் ஸ்டார்மர் உணர்ச்சி பொங்க பேசினார்.
முன்னதாக, ஆட்சியமைப்பதற்கு தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கடந்ததும், மத்திய லண்டனில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் ஸ்டார்மர் உரையாற்றினார். அப்போது அவர், "இந்த வெற்றி என்னை பெருமகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த வெற்றிக்கு நேர்மையாக இருப்பேன். மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த வெற்றியை ஏற்கிறேன். நாட்டை மறுசீரமைப்பதை தவிர, எங்களது பணி வேறொன்றுமில்லை. அந்த மாற்றம் இப்போதில் இருந்தே துவங்குகிறது" என்று பெருமித்துடன் கூறினார் ஸ்டார்மர்.