திருச்சி: சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தருகை பக்தர்கள்
மொட்டை அடித்தும், தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்தியும் நேர்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோயில் வாசல்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளே அனுமதித்து, பின் மேற்கு வாசல் வழியாக வெளியே சென்று வருகின்றனர். இந்தநிலையில் பக்தர்கள் வெளியே செல்லும் மேற்கு வாசல் வழியாக, பக்தர் ஒருவர் உள்ளே செல்ல முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: "அரசு நிலம் வழங்கியும் மயான வசதி இல்லை" - கொட்டும் மழையில் சடலத்துடன் போராடிய மக்கள்!
அப்போது அந்தப் பகுதியில் இருக்கும் பாதுகாவலர், பக்தரை தடுத்து, "இந்த வழியாக போகக் கூடாது, வடக்கு வாசல் வழியாக வாருங்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த பக்தர், 'இதற்கு முன்னால் சிலரை உள்ளே அனுமதித்தீர்கள். அதே போல் எங்களையும் அனுமதியுங்கள்' என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர், பக்தரை தகாத வார்த்தையில் பேசியும் கட்டையால் தாக்க வருவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
குற்றச்சாட்டு: காவலர்கள் சிலர் கையூட்டு பெற்றுக் கொண்டு மேற்கு வாசல் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் தற்போது சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாதுகாவலராக இருப்பவர், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை தகாத வார்த்தையில் பேசி அடிக்க வந்த சம்பவம் பல பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாவலர் மீது நடவடிக்கை: கோவில் நிர்வாகம் இது குறித்து முறையான விசாரணை நடத்தி இந்த பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்