ஜெருசலேம்:காசாவுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை சனிக்கிழமை அதிகாலை ஒப்புதல் அளித்தது. அதன்படி இஸ்ரேல் வசம் உள்ள பிணை கைதிகள் விடுவிக்கப்படுவர். மேலும் ஹமாஸ் உடனான 15 மாத போர் நிறுத்தமும் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மிகவும் பேரழிவை சந்தித்த போர் முடிவுக்கு வருகிறது.
ஹமாஸ் அமைப்பால் தாமதம்:யூத சட்டப்படி சனிக்கிழமை விடுமுறை தினம் என்ற போதிலும் முக்கியமான முடிவு என்பதால் சனிக்கிழமை அதிகாலை வரையிலும் இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ஜெருசலேம் நேரப்படி அதிகாலை ஒரு மணிக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னதாக போர் நிறுத்தத்துக்கான நடுநிலையாளர்களாகப் ஈடுபட்டு வந்த அமெரிக்கா, கத்தார் தரப்பில் இஸ்ரேல்-காசா இடையேயான போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அன்றே அறிவிக்கப்பட்டது. போர் நிறுத்தத்தை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை குழு வெள்ளிக்கிழமையன்றே அங்கீகரித்து விட்டது. எனினும் கடைசி நேரத்தில் ஹமாஸ் அமைப்பினரால் சிக்கல் எழுந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியிருந்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 15 மாதங்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும். முதல் கட்டமாக விடுவிக்கப்பட உள்ள 33 பிணை கைதிகள் உள்ளிட்டோரின் பெயர்களும் இறுதி செய்யப்பட்டன. காசா தரப்பில் இருந்து விடுவிக்கப்படும் பிணை கைதிகளை அழைத்துச் செல்வதற்காக சிறப்பு படை ஒன்றை அமைத்து நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். 33 பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட உள்ளனர். ஹமாஸ் தரப்பில் இருந்து போர் நிறுத்தத்தின் முதல் நாளில் மூன்று 3 பெண் பிணை கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். ஏழாம் நாளில் நான்கு பேர், மீதம் உள்ள 26 பேர்களை அடுத்தடுத்த ஐந்து வாரங்களுக்குள் விடுவிப்பது என்று ஹமாஸ் இயக்கத்தினர் கூறி உள்ளனர்.
மத்திய காசா பகுதியான டெய்ர் அல்-பாலாவில் கடந்த 2ஆம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் காயம் அடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபர் (Image credits-AP) மக்கள் மகிழ்ச்சி:அதே போல இஸ்ரேலால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இஸ்ரேலின் நீதித்துறை தகவலின்படி 95 பேர் கொண்ட பிணை கைதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னதாக பிணை கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து எல்லை பகுதிகளை திறப்பது குறித்து விவாதிக்க இஸ்ரேல் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமையன்று கெய்ரோ சென்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவார்கள். அதன் தொடரச்சியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரகணக்கான பாலஸ்தீனியர்கள் குண்டு வீச்சுகளுக்கு இடையே மிச்சம் இருக்கும் வீடுகளுக்குத் திரும்புவார்கள். போரினால் இடம் பெயர்ந்த காசா பகுதியை சேர்ந்த எக்லாஸ் அல்-கஃபர்னா, "ஞாயிற்றுக்கிழமை முதல் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்," என்றார்.
காசாவில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ராணுவத்தினர் இருக்கும் நிலையில் அந்தப் பகுதிக்குள் மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே நேரத்தில் இஸ்ரேல்-காசா எல்லை பகுதிகளிலும் மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இஸ்ரேல் படைகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதனை வலுவாக எதிர்கொள்வோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இரு தரப்பிலும் பேரழிவு:ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து வந்தனர். இப்போது அவர்களில் 100 பேர் மட்டுமே பிணை கைதிகளாக உள்ளனர். ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்கியதில் 46,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோ் பெண்கள், குழந்தைகள் ஆவர்.
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா, கத்தார் ஆகியவை அறிவித்த போதிலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் உயிரிழந்த 88 பேரின் உடல்கள் மருத்துவமனக்கு கொண்டு வரப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் கையெழுத்தாவதற்கு முன்பு இருதரப்பிலும் பலத்தை நிரூபிக்கும் வகையில் தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு காசா பகுதி நகரமான கான் யூனிஸில் கடந்த ஆண்டு டிசம்பர் 2 அன்று இஸ்ரேலிய தாக்குதல்களால் பேரழிவிற்குள்ளான பகுதியில் நடந்து செல்லும் பாலஸ்தீனியர்கள் (Image credits-AFP) டொனால்டு டிரம்ப்பின் எச்சரிக்கை:இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்தன. கத்தார் தலைமையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. எனினும் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வரும் 20ஆம் தேதி தாம் பதவி ஏற்பதற்குள் ஹமாஸ் பிடியில் உள்ள பிணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகள் நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே இப்போது இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, காசாவில் இருக்கும் இஸ்ரேல் படையினர் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னரே பிணை கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று ஹமாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர். இஸ்ரேல்-காசா போர் நிறுத்தத்துக்குப் பின்னர் காசா குறித்து பல்வேறு தரப்புகளில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் யார் ஆட்சி செய்யப்போகிறார்கள். போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசாவை யார் மறுகட்டமைக்கப்போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
இஸ்ரேல்-காசா இடையேயான போர் என்பது மத்திய கிழக்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உலகம் முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசுக்கு ஆதரவு அளிக்கும் வலதுசாரி ஆதரவாளர்கள் போர் நிறுத்தம் மேற்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர், "காசா உடனான போர்நிறுத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்,"என்று எக்ஸ் தளத்தில் தெரிவி்ததிருந்தார். ஆனால், அமைச்சர் இடமார் பென்-க்விர் பதவி விலகினால் அது இஸ்ரேல் அரசுக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.