எருசலேம்: இஸ்ரேலுக்கு எதிராக பல ஆன்டுகளாக பல்வேறு தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் ராணுவத்தின் தளபதி முகமது டெய்ஃப், கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முகமது டெய்ஃப் உடைய மரணத்தையும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தினர் 251 பேர் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 39 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த போரின்போது ஹமாஸ் அமைப்பின் தளபதியாக செயல்பட்ட முகமது டெய்ஃப், தமது ராணுவப் படைகளுக்கு கட்டளை இட்டதாகவும், ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவிக்கிறது.