புதுடெல்லி:இந்தியாவின் போர் வலிமையை அதிகரிக்கும் முக்கியமான நோக்கத்தின் அடிப்படையில் வெளிநாட்டு ராணுவ விற்பனையின் கீழ் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வானில் நீண்டநேரம் தாக்குப் பிடித்து பறக்கும் வல்லமை பெற்ற எதிரிநாட்டை தாக்கும் திறன் பெற்ற 31 ட்ரோன்களை அமெரிக்காவிடம் இந்தியா வாங்குகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 20 நாட்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ட்ரோன்களை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.டெல்லியில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தின் போது அமெரிக்கா, இந்தியா நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை குறிக்கும் வகையில் முன்னணி ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த அட்டாமிக்ஸ் குளோபல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேல் லால் இதில் பங்கேற்றார்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் எம்க்யூ-9பி எனும் எதிரிகளை வேட்டையாடி அழிக்கும் ட்ரோன்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சீனாவுடன் எல்லைப் பிரச்னையில் இந்தியா பதற்றமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனுக்கு இந்த ட்ரோன்கள் வலுசேர்க்கும் வகையில் இருக்கும்.எம்க்யூ-9 ரீப்பரின் எம்க்யூ-9பி ட்ரோன் வகைகள் அதன் செயல் திறனில் புகழ் பெற்று விளங்குகின்றன. குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் காபூல் நகரில் அல்-கைய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி என்பவர் ரீப்பர் வகை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார்.