டாக்கா:வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. அந்நாட்டில் பல்வேறு இடங்களை போராட்டங்காரர்கள் சூறையாடி வருகின்றனர். முன்னதாக ஆயிரக்கணக்கான போரட்டகாரர்கள் அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் மாளிகையை முற்றுகையிட்டனர்.
பின்னர் அங்குள்ள பல பொருட்களையும் எடுத்துச் சென்றனர். மேலும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தினர். அதனை தொடர்ந்து வங்கதேச தந்தை முஜிபுர் ரகுமானின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது.
முன்னதாக, ஷேக் ஹசீனா தனது பதவியைப் ராஜினாமா செய்துவிட்டு, ஹெலிகப்டரில் இந்தியாவில் நேற்று தஞ்சமடைந்தார். தற்போது அந்நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.
இதனை தொடர்ந்து நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் கூறியதாவது, "விரைவில் அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்படும். 18 பேர் அடங்கிய குழு ஆட்சி, நிர்வாகத்தை கவனிக்கும். இனிமேல் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படாது. மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இப்போதைய சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அதிபர் முகமது சகாபுதீனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதற்கு முன்னதாக போராட்டத்தை கைவிட வேண்டும். போராட்டத்தில் நடந்த உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்து இருந்தார்.