விக்கிபீடியா, தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களால் கட்டுப்படுத்தப்படுவதாக உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் தலைவர்) குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், இந்த தளத்திற்கு மக்கள் யாரும் நன்கொடை அளிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். தனக்குச் சொந்தமான எக்ஸ் தள (பழைய டிவிட்டர்) பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
ஹமாஸ் ஆதரவாளர்கள் 40 பேர், இஸ்ரேலுக்கு எதிராகவும், இசுலாமிய அமைப்புகளுக்கு ஆதரவாகவும் அந்த தளத்தில் எழுதியதாக, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பைரேட் வயர்ஸ் (Pirate Wires) ஊடகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி மஸ்க் இதை தெரிவித்துள்ளார்.
மேலும், விக்கிபீடியா தங்கள் பெயரை டிக்கிபீடியா என மாற்றிக் கொண்டால், கூடுதலாக ஒரு பில்லியன் டாலர்கள் தருவதாகவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் நகையாடியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales) ஒரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டில், "நிறைய பேர் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறார்கள். சிந்தனைமிக்க மற்றும் தீவிரமானவர்கள் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறார்கள். இது ஒரு உண்மையான பிரச்சனை என்று நான் நினைக்கிறேன். ட்விட்டர் இருந்தது, இப்போது அது எக்ஸ் ஆக உள்ளது. அவ்வளவு தான் வித்தியாசம். இது உலகத்தின் பொது மைதானமாகும். ஆனால் இங்கு ட்ரோல்களாலும், காமெடி செய்பவர்களாலும் நிரம்பி விடுமானால், அது யாருக்கும் நல்லதல்ல.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ANI, விக்கிபீடியா விவகாரம்:
முன்னதாக, செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் விக்கிபீடியவை கடுமையாக எச்சரித்திருந்தது. அதாவது, ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) செய்தி நிறுவனத்தின் விக்கிபீடியா முகப்புப் பக்கத்தில் செய்த திருத்தங்களை குறித்த தகவல்களைப் பகிரத் தவறியதற்காக, டெல்லி உயர் நீதிமன்றம் ஆட்சேபனை தெரிவித்து அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
ANI செய்தி நிறுவனத்தின் விக்கிபீடியா பக்கத்தில், நிறுவனமே சில மாற்றங்களை செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதில், இந்திய அரசின் பிரச்சாரக் கருவி என ஊடக நிறுவனத்தை விக்கிபீடியா குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக ANI நீதிமன்றத்தை நாடியதையடுத்து, விக்கிபீடியாவிடம் திருத்தங்கள் குறித்த தரவுகள் கோரப்பட்டது.