வாஷிங்டன்:உலக அளவில் கவனத்தை பெற்றுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கும், ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இடையே இப்போதே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், பரஸ்பரம் ஒருவருக்கொருலர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால் அவர்களின் தேர்தல் பிரசாரங்களில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் தமது முதல் தேர்தல் பிரசாரத்தில், 'தேர்தல் நிதிக்காக டொனால்ட் ட்ரம்ப் தொழிலதிபர்களையும், கோடீஸ்வரர்களையும் நம்பியுள்ளார்' என்று கமலா ஹாரிஸ் விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலடி அளிக்கும் விதத்தில், 'ஜோ பைடன் ஆட்சியில் நாடு சந்தித்துவரும் பின்னடைவுகளுக்கு பின்புலத்தில் கமலா ஹாரிஸ் உள்ளார் என்றும், அவர் தொட்ட எதுவும் துலங்காது' என்றும் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், ட்ரம்பின் குடியரசுக் கட்சி சார்பில் புதிய தேர்தல் பிரசார உத்தி ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில், 'நாட்டின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தவறிவிட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக, புலம்பெயர்ந்தோரால் விளைவும் குற்றங்கள், பயங்கரவாதம், மனித கடத்தல்கள் உள்ளிட்ட அதிகரித்துள்ளன. மொத்தத்தில் ஹாரிஸின் கொள்கைகள் சட்டவிரோத குடியேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது' என்று அந்த தேர்தல் பிரசார விளம்பரத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், கமலா ஹாரிஸை 'ஆபத்தான தாராளவாதி' என்று ட்ரம்ப் சொல்வதை போன்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், ட்ரம்பின் இந்த விமர்சனத்தை 'வடிகட்டிய பொய்' என்று கமலா ஹாரிஸ் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.