டெல்லி : மியான்மரில் ராக்கைன் மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அங்கு உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், மியான்மரின் ராக்கைன் மாநிலத்தின் நிலைமை கவலைக்குரியதாகவும், பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகவும் உள்ளது. அனைத்து இந்தியர்களும் ராக்கைன் மாநிலத்தை விட்டு காலி செய்து அங்கிருந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் வேறு எங்கிருந்தும் இந்தியர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கடந்த 2021ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.