ஹைதராபாத்: அமெரிக்க டாலரை தவிர்த்து இந்தியா இடம் பெற்றுள்ள பிரிக்ஸ் நாடுகள் புதிய கரன்சி முறையை பின்பற்றினால் அந்த நாடுகள் மீது 100 சதவிகிதம் கட்டணங்கள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆர்பிஐ முன்னாள் கவர்னர் துவ்வூரி சுப்பாராவ்,"டொனால்டு டிரம்பின் எச்சரிக்கையின் படி அவர் என்னமாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை தெளிவுபடுத்தவில்லை. இது போன்று பிரிக்ஸ் நாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற வகையில் அமெரிக்க சட்டங்கள் அனுமதிக்குமா? என்று தெரியவில்லை.
அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு புதிய கரன்சியை அமல்படுத்த வேண்டும் என்பதில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்திருந்தபோதிலும் அந்தந்த நாடுகளின் பொருளாதாரம், அரசியல் சூழல் காரணமாக இதில் ஒன்றுபடவில்லை.
அமெரிக்க டாலரை தவிர்க்கும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவிகித கட்டணங்கள் விதிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். வெளிப்படையாக அவர் இவ்வாறு கூறினாலும், அவர் அது போல செய்ய மாட்டார். எந்த மாதிரியான எச்சரிக்கையை டிரம்ப் விடுக்கிறார் என்பதில் தெளிவில்லை. டாலரை தவிர்த்து வேறு ஒரு கரன்சிக்கு ஒரு நாடு மாறினால் அமெரிக்கா என்னமாதிரியான அளவுகோலைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவில்லை. டாலரை ஏற்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பதை மட்டுமே அமெரிக்க சட்டங்கள் அனுமதிக்கின்றன.
கோட்பாட்டு ரீதியாக பிரிக்ஸ் நாடுகளுக்கான பொது கரன்சி என்பது டாலர் மேலாதிக்கத்தின் ஆபத்துக்களில் இருந்து பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகளைக் காப்பாற்றும். நடைமுறையில், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டின் காரணமாக அந்தத் திட்டம் தொடக்கமற்றதாகவே இருக்கும். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை பொறுத்தவரை, குறைந்த பட்சம் இந்தியா மட்டும் அல்ல, அனைத்து நாடுகளுமே தங்கள் பணவியல் கொள்கை சுயாட்சியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஒரு பொதுவான கரன்சிக்காக எந்த ஒரு நாடும் தங்களுக்கு தாங்களே பிணையம் வைக்காது. இது பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஸ்திரமின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
பிஆர்ஐ எனும் (பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், வர்த்தகத்தை அதிகரித்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் ஆசியாவை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் நிலம் மற்றும் கடல்சார் கட்டமைப்புகள் மூலம் இணைக்க முயலும் சீனாவின் அமைப்பு) முயற்சியின் கீழ் சீனக் கடன்களின் பெரும்பகுதி ஆர்எம்பி எனப்படும் சீனாவின் கரன்சியில் உள்ளது. மாறாக, இந்தியாவைப் பொறுத்தவரை உலக வர்த்தகத்தில் அதன் பங்கு குறைவாக உள்ளது. குறிப்பாக அமெரிக்க டாலருக்கு மாற்றாக ரூபாய் மதிப்பு சர்வதேசமாக மாறுவதற்கு இந்தியா நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்," என்றார்.