தருமபுரி : ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த புயல் கடந்த நவ 30ம் தேதி காரைக்கால் - மகாபலிபுரத்திற்கு இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தும், தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. மற்ற மாவட்டங்கள் பரவலான சேதத்தை சந்தித்தன. அதிகமாக பாதிக்குள்ளான விழுப்புரம் மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மற்ற மாவட்டங்களை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின் பேரில், தருமபுரி மாவட்டத்தில் கனமழையால் பாதிப்புக்குள்ளான இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தோம்.
— Udhay (@Udhaystalin) December 2, 2024
அந்த வகையில், அரூர் பேரூராட்சி, வாணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட… pic.twitter.com/0H5RQnkqxM
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ( டிச 2) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பாதிப்பிற்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய, சென்னையில் இருந்து விமானம் மூலம் வருகை புரிந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பெய்த கனமழை காரணமாக, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி, வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், மலை அடிவாரத்திற்கு அந்த பக்கம் இருந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊருக்குள் வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், அங்கு தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : "மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்து மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
இந்நிலையில் தான், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை பார்வையிட்டு, உடனடியாக தற்காலிக பாலத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதி மக்களைச் சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் கனமழை பாதிப்பிற்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
— Udhay (@Udhaystalin) December 2, 2024
இதுவரை இல்லாத அளவுக்கு கொட்டித்தீர்த்த கனமழையால், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி… pic.twitter.com/1scHiIQcPA
அதேபோல், நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி, வேப்பமரத்தூர், வே.கொம்மத்தம்பட்டியில் இணைப்புச் சாலை கனமழையால் துண்டிக்கப்பட்டது. இதனால், சாலைக்கு அந்தப்பக்கம் உள்ள 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊருக்குள் வர முடியாத நிலையில் தவித்தனர். இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தற்காலிக சாலைகள் அமைக்கும் பணியையும், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், தற்காலிக சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.