சென்னை: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருவெடுத்ததால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்தது. மேலும் வானிலை ஆய்வு மைய தகவல்களின் படி, விழுப்புரம் மாவட்டத்தின் கேதர் பகுதியில் 42 செ.மீ. மழையும், சூரப்பட்டுவில் 38 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல விழுப்புரம் நகரப்பகுதி, முண்டியம்பாக்கம், முகையூர், தருமபுரி மாவட்டம் அரூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதம்பூண்டி, வெங்கூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதுமட்டும் அல்லாது, புதுச்சேரியில் 48.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல, புதுச்சேரியில் இது வரை பெய்த மழைகளில் இதுவே அதிக அளவிலான மழைப் பொழிவாகும். இதற்கு முன், கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 எக்டேர் பயிர்கள், 50 படகுகள், 15 கூரை வீடுகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5000; புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
மேலும் அதிக அளவிலான மழை பொழிந்ததன் காரணமாக, புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிக்கு ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சென்னையில் இருந்து விரைந்த ராணுவ வீரர்கள் 40 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலத்த காற்று வீசியதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அரசூர் அருகாமையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வராகி கோயிலில் சுமார் 20 பேர் சிக்கி உள்ளதாகவும் அது குறித்த வீடியோ காட்சியும் வெளிவந்துள்ளது. அதேபோல, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் தொடர் மழை காரணமாக இரண்டாவது நாளாக தண்ணீர் சூழ்ந்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார்.