வில்மிங்டன் : செமி கண்டக்டர் சிப்களின் தேவை என்பது நிகழ் காலத்தில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. ஆட்டோ மொபைல், தொழில்நுட்பம், மொபைல் தயாரிப்பு, ராணுவ தளவாடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த செமி கண்டக்டர்களின் பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது.
உலக அளவில் செமி கண்டக்டர் தயாரிப்பில் தைவான் முன்னணியில் உள்ளது. அதேநேரம் தைவானை தன் கட்டுக்குள் கொண்டு வந்து செமி கண்டக்டர் துறையை தன் கைவசம் வைத்து கொள்ள சீனா முயற்சித்து வருகிறது. இதனால் சர்வதேச அளவிலான செமி கண்டக்டர் உற்பத்தியில் தைவானை மட்டும் நம்பியிருக்காமல் பல்வேறு நாடுகள் மைக்ரோ சிப் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்தியாவில் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் செமி கண்டக்டர் உற்பத்தி மற்றும் அசம்பிளி ஆலை கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் ஆலை குஜராத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டெண்டர் வழிமுறைகளில் டாடா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
அதேநேரம், அமெரிக்காவும் செமி கண்டக்டர் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகிறது. தைவான் நிறுவனங்களை அமெரிக்காவில் உற்பத்தி ஆலை தொடங்க வைத்து அதன்மூலம் தனது ஆட்டோ மொபைல், ராணுவத்திற்கு தேவையான மைக்ரோசிப் உற்பத்தியில் தன்னிறைவு பெற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.