டெல்லி:புனித மார்டின் தீவின் இறையாண்மையை அமெரிக்காவிடம் ஒப்படைந்திருந்தால் வங்கதேச ஆட்சியில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டிருக்காது என ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல், சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் கையில் எடுத்த போராட்டம் பூகம்பமாக வெடித்த நிலையில், வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹாசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். ஷேக் ஹாசீனாவின் வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டதால் நாட்டு மக்களிடம் உரையாற்ற முடியாமல் போன நிலையில் தற்போது அவர் ஆற்றாத உரை வெளியாகியுள்ளது என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் ஊர்வலத்தை பார்க்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறினேன் என கூறும் ஷேக் ஹாசீனா தனது அவாமி லீக் கட்சி குறிவைக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். விரைவில் வங்கதேசம் திரும்புவேன் எனவும் அவர் கூறுயுள்ளார்.
"வங்கதேசத்தில் எதிர்காலத்திற்கு பிராத்திப்பேன். உயிரிழந்தவர்களின் ஊர்வலத்தை பார்க்க கூடாது என்பதற்காக ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்களுக்கு மத்தியில் பதவிக்கு வர நினைத்தார்கள், அதனை நான் அனுமதிக்கவில்லை.
புனித மார்டின் தீவின் இறையாண்மையை அமெரிக்காவிடம் ஒப்படைந்திருந்தால் நான் பதவியில் இருந்திருக்கலாம். தயவு செய்து தீவிரவாத சூழ்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என்று தனது நாட்டு மக்களை கேட்டுகொள்கிறேன். நான் தொடர்ந்து பதவியில் நீடித்திருந்தால், மேலும் பல உயிர்களும், எனது நாட்டின் வளங்களும் போயிருக்க கூடும்.