நியூ யார்க் :அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கி பாலத்தின் மீது நேற்று (மார்ச்.26) அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் பாலம் உடைந்து நீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்ப பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.
இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், தற்போது கைவிடப்பட்டதாக மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், நீரில் மூழ்கிய 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீரில் மூழ்கிய நேரம் உள்ளிட்டவைகளை கணக்கிடுகையில் நீரில் மூழ்கியவர்கள் உயிரிழந்து இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பாலத்தின் மீது மோதிய கப்பல் தளி (Dali) சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த Synergy Marine Group என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. சரக்கு கப்பலில் 22 இந்திய மாலுமிகள் பணியாற்றினர். முன்னதாக சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோத உள்ளது குறித்து கப்பல் மாலுமிகள் தகவல் தெரிவித்த நிலையில், போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டதால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.