பெஷாவர்(பாகிஸ்தான்):பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 12 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நடந்த இன்னொரு மோதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னு பகுதியில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு முன்பு ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெடிபொருட்கள் கொண்ட லாரியை மோத வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் ஹபீஸ் குல் பகதூர் என்ற தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த திங்கள் கிழமையன்று தீரா பகுதியில் நடந்த தாக்குதலில் 8 ராணுவ வீர ர்களும், 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து 7 காவல்துறை அதிகாரிகளை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர் பழங்குடியின தலைவரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்