சிங்கப்பூர்: இந்திய வன உயிரிகள் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இந்திய பயணிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 16 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
அப்துல் ஜாஃபர் ஹாஜி அலி (40) என்பவர் சென்னையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி விமானம் மூலம் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்து வேறொரு விமானத்தில் ஜகார்தாவுக்கு பயணிக்க இருந்த நிலையில் அவர் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவரது ஒரு பேகில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள 58 இந்திய நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரிய வந்தது.
உடனே விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்திய சோதனையில், அவர் கடத்தி வந்த ஆமைகளில் ஒன்று இறந்து கிடந்துள்ளது. மேலும் 22 ஆமைகள் எடை குறைந்து காணப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இறக்குமதி ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ள ஆமைகளை கடத்தி, துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: போர் பதற்றங்களுக்கு இடையில், சிரியாவில் இருந்து 75 பேரை மீட்ட இந்தியா?
நீதிமன்றத்தில் இதுகுறித்த விசாரணை வந்தபோது, அப்துல் ஜாஃபர் ஹாஜி அலி தரப்பில், ஆகஸ்ட் 28 ஆம் தேதி சென்னையில் 'பாய்' என அடையாளப்படுத்தப்பட்ட நபர் தனக்கு ஒரு பையை கொடுத்துவிட்டு அதனை இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதற்கு கைமாறாக ஜாஃபர் ஹாஜி அலியின் பயண செலவு அனைத்தையும் ஏற்பதாக அந்த நபர் கூறியதாகவும், பையில் ஆமைகள் இருப்பதை நான் கடைசி வரையில் பார்க்கவில்லை என்று ஜாஃபர் ஹாஜி கூறியுள்ளார். அப்போது, சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியத்தின் வழக்கறிஞர் லிம் சோங், அப்துல் ஜாஃபர் ஹாஜி அலிக்கு கொடுக்கப்பட்ட பையை சரிபார்க்க போதுமான வாய்ப்பு இருந்துள்ளது என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் அப்துல் ஜாஃபர் ஹாஜி அலிக்கு ஒரு வருடம் நான்கு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.