கொழும்பு: இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே வரும் 15ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இந்தியாவுக்கு அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.
திசநாயகே வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, "இந்தியாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை அதிபர் அனுரா குமார திசநாயகே சந்தித்துப் பேச உள்ளார். அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத், நிதித்துறை துணை அமைச்சர் அணில் ஜெயந்தா ஃபெர்ணான்டோ, சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரும் செல்கின்றனர்,"என்றார்.
திசநாயகே இலங்கை அதிபராக பதவி ஏற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட திசநாயகே இப்போது இந்தியா வருகை தர உள்ளார்.
இதையும் படிங்க: "அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை" - முதலமைச்சர் விளக்கம்!
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இலங்கை அதிபர் திசநாயகே தலைமையிலான இலங்கை தேசிய மக்கள் கட்சி பதவி ஏற்றது. இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டி இருந்ததால் அவரது இந்திய பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. இப்போது நாடாளுமன்ற தேர்தலிலும் அதிபரின் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்தே இப்போது அதிபர் திசநாயகே முதன் முதலாக இந்திய பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியாக மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, இந்த நிலையில் டெல்லி வரும் இலங்கை அதிபர் திசநாயகேவிடம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகளையும் விடுவிக்கும்படியும் இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. இலங்கை தரப்பில் இந்தியாவிடம் இருந்து நிதி உதவி கோரப்படும் என்று தெரிகிறது.