வாஷிங்டன்: புதிய அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொற்காலம் துவங்கிவிட்டது என்றார். ஜனவரி 20ஆம் தேதியை "விடுதலை நாள்" என்று வர்ணித்த அவர், பல மாற்றங்கள் "மிக விரைவாக" வரும் என்பதால் "அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்துவிட்டது" என்றும் பேசினார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்றிரவு இந்திய நேரப்படி 10.21 மணிக்கு இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில், நேற்று தலைநகர் வாஷிங்டனில் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில், அவர் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு
அமெரிக்காவின் பொற்காலம் இப்போதிலிருந்து துவங்கிவிட்டது. இந்நாளிலிருந்து நம் நாடு மீண்டும் செழித்து, உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு நாடும் நம்மைப் பார்த்து பொறாமைப்படும். இனிமேலும், யாரும் நம்நாட்டை சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
நமது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும். நமது நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் வன்முறை நியாயமற்ற ஆயுதமயமாக்கல் போன்றவை முடிவுக்கு வரும். நம் நாட்டை வளமாக, சுதந்திரமான மற்றும் பெருமைமிக்க ஒரு தேசமாக உருவாக்குவதே எனது லட்சியம்.
அமெரிக்கா முன்பை விட பெரிதாகவும், வலிமையானதாகவும், விதிவிலக்கானதாகவும் விரைவில் மாறும். தேசத்தின் வெற்றிக்கான ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கத்தில் நாம் உள்ளோம் என்ற நம்பிக்கையுடன் இந்த பதவிக்கு திரும்புகிறேன்.
ஜோ பைடன் மீது குற்றச்சாட்டு
முதலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களில் நேர்மையாக இருக்க வேண்டும். இன்று நமது அரசாங்கம் நம்பிக்கை நெருக்கடியைக் எதிர்கொள்கிறது. ஏனென்றால், பல ஆண்டுகளாகத் தீவிரவாதம் மற்றும் ஊழல் நிறைந்த அரசு ஆட்சியில் இருந்தது. நம் சமூகத்தின் தூண்கள் முற்றிலும் உடைந்து சிதைந்து கிடைக்கும் நிலையில், உள்நாட்டின் ஒரு சிறிய நெருக்கடியைக் கூட சமாளிக்க முடியாத அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளில் ஏற்பட்ட பேரழிவின் போது தொடர்ச்சியாக தடுமாறிய ஒரு அரசாங்கத்தைக் கொண்டிருந்தோம்.
ஊடுருவல் தடுப்பு
முன்னாள் அரசு சட்டத்தை மதிக்கும் அமெரிக்க மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது. சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆபத்தான குற்றவாளிகளுக்கு அடைக்கலம் மற்றும் பாதுகாப்பை அளித்தது. வெளிநாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வரம்பற்ற நிதியை வழங்கிய அரசால், சொந்த மக்களின் எல்லையை பாதுகாக்க மறுத்து விட்டது. அதனால், அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்படுகிறது. அதன் மூலம், ஊடுருவல் தடுக்கப்பட்டு, ஏற்கனவே சட்டவிரோதமாக ஊடுருவிய நபர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
விடுதலை நாள்
இந்த தருணத்திலிருந்து அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்து விட்டது. நமது நாட்டின் சுதந்திரங்களும், விதிகளும் இனி மறுக்கப்படாது. மேலும், அமெரிக்க அரசின் நேர்மை, திறமை, விசுவாசம் அனைத்தும் மீட்டெடுக்கப்படும். நமது குடியரசை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காக போராடும் என் உயிரைப் பறிக்க முயன்றனர். அது தான், என்மீதான துப்பாக்கிச் சூடு. அப்போது என் உயிர் ஒரு காரணத்திற்காக காப்பாற்றப்பட்டது. அது, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றவே கடவுளால் காப்பாற்றப்பட்டேன்.
அதனால், அமெரிக்க மக்களுக்காக, ஒவ்வொரு நாளும் கண்ணியத்துடனும், வலிமையுடனும், சக்தியுடனும் போராடுவோம். அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரும் நோக்கத்துடன் முன்னேறிச் செல்லுவோம். அதனால், ஜனவரி 20 அமெரிக்க மக்களின் விடுதலை நாள் (Liberation Day).