கலிபோர்னியா:அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவி நிதீஷா கந்துலா (23), கடந்த மே 28 அன்று திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது.
பின்னர், இதுகுறித்து போலீசார் நிதீஷாவுக்கு பழக்கமான வட்டாரத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், நிதிஷா காணாமல் போவதற்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல இடங்களில் நிதிஷாவை தேடி பார்த்த போலீசார், மே 30 அன்று மாணவியைக் காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்து தேடுதல் பணியை முடுக்கியுள்ளனர்.
அத்துடன், நிதிஷாவின் அடையாளங்களை வெளியிட்டுள்ள போலீசார் ''காணாமல் போன மாணவி 5 அடி 6 அங்குல உயரம் மற்றும் சுமார் 72 கிலோ இருப்பார் என்றும், கருப்பு முடி மற்றும் கறுப்பு நிற கருவிழி கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மாணவி குறித்து தகவல் தெரிந்தால் உடனே (909) 538-7777 அல்லது LAPD இன் (213) 485-2582 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், மாணவி நிதிஷா கலிபோர்னியா ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட டொயோட்டா கரோலா காரை பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த காருடைய நிறம் பற்றி குறிப்பிடவில்லை.