சிஹானூக்வில்:கம்போடியாவில் வேலை தேடும் இந்தியர்களுக்கு தூதரகம் சமீபத்தில் முக்கிய அறிவுரையை வழங்கி இருந்தது. அதாவது, வேலை தேடுபவர்கள் வெளியுறவு அமைச்சகத்தால் (MEA) அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டு நிறுவனங்களை மட்டுமே அணுக வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், சுற்றுலா விசாவில் சென்று வேலை தேடும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தது.
இருப்பினும், போலி ஏஜெண்டுகளை நம்பியும், டூரிஸ்ட் விசாவில் வேலை தேடி பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் இந்தியர்கள் அங்குள்ள மோசடி முதலாளிகளிடம் சிக்கி தாய் நாட்டுக்கு திரும்ப முடியாமல் இன்னலுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் கம்போடியாவின் சிஹானூக்வில் பகுதியில் வேலை மோசடியால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை ஜின்பே-4 என்ற இடத்தில் இருந்து கம்போடிய அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக புனோம் பென்னில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் இந்திய தூதரகத்தின் குழுவினர் பாதிக்கப்பட்ட இந்தியர்களை கம்போடியாவின் உயர் மட்ட அதிகாரிகளின் உதவியுடன் புனோம் பென்னுக்கு மீட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 60 பேர் கொண்ட குழுவை முதற்கட்டமாக தாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம், எஞ்சியவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதுவரை அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.