மாஸ்கோ: அணு சக்தி கொண்ட நாட்டின் ஆதரவுடன் ரஷ்யா மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடும் சேர்ந்து ரஷ்யா மீது நடத்தும் தாக்குதலாகவே கருதப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. போர் தொடங்கி இன்றுடன் ஆயிரம் நாட்கள் கடந்து விட்டது. இந்த நிலையில் அதிபர் விளாடிமீர் புதின், ரஷ்யாவின் ஒரு திருத்தப்பட்ட அணு கோட்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்.
புதிய அணு கோட்பாட்டின்படி ரஷ்யா மீது எந்த ஒரு பெரிய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதற்கு அணு ஆயுதம் மூலம் பதிலடி கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் உடனான மோதலில் மேற்கு நாடுகளை பின்வாங்கச் செய்யும் வகையில், நாட்டின் அணு ஆயுதத்தை கையில் எடுக்க தயங்கமாட்டோம் என்பதை புதினின் தயார்நிலை நிரூபிப்பதாக உள்ளது.
நீண்ட தூரம் சென்று தாக்கும் அமெரிக்காவின் ஏவுகனைகளை ரஷ்யாவுக்குள் ஏவும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் ரஷ்யாவின் திருத்தப்பட்ட அணு கோட்பாடு வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "இப்போதைய சூழலுக்கு ஏற்ப சரியான நேரத்தில் இந்த கோட்பாடு வெளியிடப்பட்டுள்ளது,"என்றார்.
இதையும் படிங்க:"எல்ஐசி இணையதளத்தை இந்தி திணிப்பு பிரச்சார கருவியாக மாற்றுவதா?" - முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
அணு சக்தி கோட்பாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் புதின் சில மாற்றங்களை செய்தார். முன்பு அமெரிக்கா மற்றும் இதர நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த புதின், "உக்ரைன் நாடானது மேற்கு நாடுகளிடம் இருந்து வாங்கிய நீண்ட இலக்குகளை தாக்கும் ஆயுதங்களை ரஷ்யா மீது உபயோகித்தால் நேட்டோவும் இந்த போரில் இடம் பெற்றதாக கருதப்படும்,"என்று கூறியிருந்தார்.
இப்போது புதுப்பிக்கப்பட்ட கோட்பாட்டில், ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் பங்கேற்கும் அல்லது ஆதரவு தெரிவிக்கும் அணு சக்தி திறன் கொண்ட நாடானது, ரஷ்ய கூட்டமைப்பின் மீது உக்ரைனுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் திருத்தப்பட்ட அணு ஆயுத கோட்பாட்டில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும், ஆயுதங்களை விநியோகிக்கும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுமா என்று தெளிவாக கூறப்படவில்லை. அதே நேரத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளை திருத்தப்பட்ட கோட்பாடு விவரிக்கிறது, பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள், விமானம், ட்ரோன்கள் மற்றும் பிற பறக்கும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட வான்வழித் தாக்குதலின் போது அவை பயன்படுத்தப்படலாம் என்று ரஷ்யா கூறுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்