ஹைதராபாத்:உலகின் மிகவும் கொடிய நோயாக அறியப்படும் புற்றுநோய் பாதிப்பால் ஆண்டு தோறும் இறப்பின் விகிதமானது அதிகரித்து வருகின்றது. மரபு வழி, புகையிலை பழக்கம் மற்றும் மோசமான சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உருவாகும் இந்த புற்றுநோய் மனித வாழ்வில் பேரிடியாக உள்ளது.
எனவே, புற்றுநோய் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், அதன் தாக்கத்தினை கட்டுப்படுத்தவும் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புற்றுநோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது புற்றுநோய் குறித்த விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய தெளிவை உருவாக்கவும், நோய் குறித்த அச்சத்தை விலக்கவும் உதவுகிறது.
புற்றுநோய் குறித்த அச்சம் என்பது இயல்பான ஒன்று. ஏனெனில், உலகில் கண்டறியப்பட்டுள்ள நோய்களில் மிகவும் கொடிய நோயின் பட்டியலில் புற்றுநோயும் ஒன்று. ஆகையால், புற்றுநோயால் பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்கள் அச்சம் கொள்வது இயல்பே. இருப்பினும், தற்போது பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு மருத்துவத்துறையானது வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை இறப்பிலிருந்து காக்க இயலும்.
உலக புற்றுநோய் தின வரலாறு: கடந்த 1993ஆம் ஆண்டு ஜெனிவாவில், புற்றுநோயைக் கட்டுப்படுத்த சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான அமைப்பு (UICC) நிறுவப்பட்டது. இது உலகம் முழுவதிலும், புற்றுநோயை வேரோடு ஒழிப்பதற்கும், மருத்துவ ஆராய்ச்சியை முன்னேற்றுவதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
இந்நிலையில், இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட அதே ஆண்டில், ஜெனிவாவில் முதல் சர்வதேச புற்றுநோய் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, இந்த பெரும் முயற்சியினை புற்றுநோய் சங்கங்கள், சிகிச்சை மையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் ஆதரித்தன.
அதைத் தொடர்ந்து, 2000ஆம் ஆண்டு நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் உலக புற்றுநோய் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதில் 'புற்றுநோய்க்கு எதிரான சாசனம்' என்ற தலைப்பில் 10 கட்டுரைகள் அடங்கிய ஆவணம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, புற்றுநோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி, தடுப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் இருந்தது. மேலும், இந்த புற்றுநோய் சாசனத்தின் படியே, உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4ஆம் தேதி அனுசரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமானது.
புற்றுநோய் பாதிப்பு:புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பள்ளிகள், கல்லூரிகள், தெருக்கள் என பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் புற்றுநோய் தீவிரம் அடைந்தே வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) மேற்கொண்ட ஆய்வில், பெரும்பாலான நாடுகள் உலகளாவிய சுகாதார பாதுகாப்பிற்காக (புற்றுநோய் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை) போதுமான நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு, மக்கள் தொகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு (International Agency for Research on Cancer) தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2022ஆம் ஆண்டில் சுமார் 20 மில்லியன் பேர் புதிதாகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதில், 9.7 மில்லியன் நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5 ஆண்டுகளில் 53.5 மில்லியன் பேருக்குப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், 9 ஆண்களில் 1 ஆண் என்ற வீதத்திலும், 12 பெண்களில் 1 பெண் என்ற வீதத்திலும் உயிரிழந்துள்ளதாகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 2050ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் எனவும், இது 2022ஆம் ஆண்டில் இருந்த பாதிப்பை விட 77சதவீதம் அதிகம் ஆகும். புகையிலை பழக்கம், மது, அதீத கொழுப்பு கொண்ட உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
200க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பல வகையான புற்றுநோய் பாதிப்புகள் இருந்தாலும் அதில் பாதிக்கும் மேற்பட்டவை தடுக்கக்கூடியவை ஆகும். ஆண்கள் பெரும்பாலும் புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate cancer), நுரையீரல் புற்றுநோய் (Lung cancer), பெருங்குடல் புற்றுநோய் (Colon cancer) ஆகிய புற்றுநோய்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்கள் பெரும்பாலும் மார்பக புற்றுநோய் (Breast cancer), நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். 2019ஆம் ஆண்டு இந்தியாவில் 12 புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டதாகவும், 9.3 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் ஒரு ஆய்வு இதழ் தெரிவிக்கிறது.
புற்றுநோயின் அறிகுறிகள்:வாய்ப்புண், உடலில் தோன்றும் கட்டிகள், விதைப்பையில் ஏற்படும் கட்டிகள், எடை குறைதல், மார்பகத்தில் தோன்றும் கட்டிகள், முறையற்று ஏற்படும் மாதவிடாய் போன்றவையும் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும், நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் ஆரம்பத்திலிருந்தே முறையாக மருத்துவம் செய்து கொள்வதும் நோயினால் ஏற்படும் பெரும் இழப்பைத் தடுக்க உதவும்.
இதையும் படிங்க: உடற்பயிற்சியில் ஆர்வமில்லையா? ரத்தசோகை இருக்கலாம்! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்!