மருத்துவ சிகிச்சையில் மயக்க மருந்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி 'உலக மயக்க மருந்து தினம்' கடைபிடிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மயக்க மருந்து வழங்குநர்கள், நோயாளிகளுக்கு வலியற்ற அறுவை சிகிச்சைக்கு உதவுவதால் அவர்களை கெளரவிக்கும் நாளாகும் இது செயல்படுகிறது.
கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, அறுவை சிகிச்சை செய்யும் போது எந்த வித மயக்க மருந்தும் நோயாளிக்கு அளிக்கப்படாது. இதற்கு பதிலாக நோயாளி மயக்கமடையும் வரை தாக்கி அல்லது மது போன்ற சுய நினைவை இழக்கும் உணவுப்பொருளை கொடுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
இன்று, இதய அறுவை சிகிச்சை, சிசேரியன், மூளை நரம்பியல் சார்ந்த சிகிச்சை போன்ற நுண்ணிய சிகிச்சைகள் செய்யப்பட காரணமாக இருப்பது மயக்க மருந்து. அதுமட்டுமல்லாமல், நவீன மருத்துவ வளர்ச்சிக்கு விதை போட்டது இந்த மயக்க மருந்து தான்.
வரலாறு?:1846ம் ஆண்டு இதே தேதியில், மயக்க மருந்து முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு வித்திட்டவர் மார்டன் என்ற மருத்துவர். வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் 'ஈதரை' மயக்க மருந்தாக, அமெரிக்காவின் பாஸ்டன், மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் வெற்றிகரமான செயல்விளக்கத்தை அளித்தார்.
நோயாளியின் கழுத்தில் இருந்த ரத்த கட்டியை மயக்க மருந்து பயன்படுத்தி முதல் முதலில் வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து காட்டினார். இதனால் தான் இன்று வரை அக்டோபர் 16ம் தேதியை உலக மயக்க மருந்து தினமாக கடைப்பிடித்து வருகிறோம். இன்று வரை, நோயாளிகளுக்கு எந்த வலியும் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்து சுகாதாரப் பராமரிப்பின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:உலக பெருமூளை வாதம் தினம்; உலகளவில் 18 மில்லியன் பேர் பாதிப்பு!