தவறான அளவு Bra அணிவதால் இடுப்பு, முதுகு வலி பிரச்சனை...எச்சரிக்கை பெண்களே! - SIDE EFFECT OF WEARING WRONG BRA
SIDE EFFECT OF WEARING WRONG BRA: தவறான ப்ரா அணிவதும் மார்பக பிரச்சனைகளுக்கு ஒரு காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், மார்பக பிரச்சனைகள் மட்டுமின்றி சரியான அளவு உள்ளாடைகளை அணியாதது முதுகுவலியில் இருந்து உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறது ஓர் ஆய்வு.
ஹைதராபாத்:மேக்கப், அணிகலன்கள், ஆடைகள் என வெளித்தோற்றத்தை அலங்கரிக்கும் பொருட்களில் அதிகம் கவனம் செலுத்தும் பெண்கள், உள்ளாடைகள் வாங்குவதில் கவனம் செலுத்துவது கிடையாது. உள்ளுக்குள் போடும் ஆடை தானே..என்ன ஆகப்போகிறது என்று அசால்ட்டாக விட்டு விடுகிறோம்.
ஏன், இன்றும் பல பெண்களுக்கு அவர்களது Bra அளவு என்னவென்று தெரியாது. இதனாலேயே பலர் தவறான அளவு உள்ளாடைகளை அணிகின்றனர். இருப்பினும், சரியான அளவு உள்ளாடைகளை அணியாதது எதிர்காலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, முதலில் உங்கள் உள்ளாடைகளின் சரியான அளவைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
முதுகுவலி:நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (NIH) நடத்திய ஆய்வின்படி, தவறான அளவு உள்ளாடைகளை அணிவது முதுகுவலியின் அபாயத்தை அதிகரிக்கிறது எனக் கூறுகிறது. மேலும், "தவறான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பது பெண்களுக்கு மார்பகப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறது.
தவறான அளவு ப்ராவை அணிவதால், சில சமயங்களில் இடுப்பு, முதுகு மற்றும் தோள்பட்டை போன்ற உடலின் மற்ற பகுதிகளில் வலி அல்லது பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்" என்கிறார் புது தில்லியில் உள்ள மகளிர் மருத்துவ நிபுணர் மாயா மேத்தா.
இறுக்கமான உள்ளாடை என்ன செய்யும்?: மிகவும் இறுக்கமான மற்றும் சிறிய உள்ளாடைகளை நீண்ட நேரம் அணிவதால் மார்பக வலி, அரிப்பு, வறண்ட மார்பக தோல் மற்றும் மார்பகங்கள், இடுப்பு, முதுகு மற்றும் கழுத்தில் வலி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
சில நேரங்களில் மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவது மார்பகங்களின் தோல் திசுக்களை சேதப்படுத்தும், இது உடலின் தோரணையை மோசமாக்குகிறது மற்றும் சிலர் தோல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். மார்பக பகுதி மிகவும் மென்மையான பகுதி என்பதால் இறுக்கமான ப்ராவை அணிவதால் ப்ரா லைன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரத்த ஓட்டம் மோசமடைகிறது.
தூங்கும் போது ப்ரா அணியலாமா?:தூங்கும் போது ப்ரா அணியலாமா வேண்டாமா என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது தான். ஆனால், கனமான மார்பகங்களைக் கொண்டவர்கள் தூங்கும் போது ப்ரா அணிவது பயனுள்ளதாக இருக்கும். மார்பக இயக்கத்தை கட்டுப்படுத்தவும்,தோய்வினால் ஏற்படும் வலியில் இருந்தும் காக்கிறது. ஆனால், தரமான காட்டன் ப்ராவை தேர்ந்தெடுத்து அணிவது விளைவுகளை தடுக்கிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.