சர்க்கரை நல்லதா...கெட்டதா? இனி, சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க! - SIDE EFFECTS OF SUGAR - SIDE EFFECTS OF SUGAR
SIDE EFFECTS OF SUGAR: இனிப்பு சாப்பிட்டதும் நமக்குள் ஏற்படும் புத்துணர்ச்சிக்கு பின்னால் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய செக் இருப்பது உங்களுக்கு தெரியுமா? உணவைச் சுவையாக மாற்றும் சர்க்கரை நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்கிறது NCBI அறிக்கை.
சென்னை: அறுசுவையில் இனிப்பு சுவையே பலருக்கு பிடித்தமானதாக இருந்தாலும், அது ஆரோக்கியமானதா என்ற கேள்விக்குப் பதில் தேடும் காலம் இது. நமது அன்றாட உணவு முறையில் சர்க்கரை அங்கமாகவே மாறிவிட்டது. 'காலையில் எழுந்தவுடன் படிப்பு' என்ற பாரதியின் பாடலை ஓவர் டேக் செய்து காலையில் எழுந்தவுடன் டீ, காபி என்றாகிவிட்டது.
சர்க்கரை உட்கொள்வதால் உடல் பருமன், வளர்சிதை மாற்றம், நீரிழிவு, இதய நோய், புற்றுநோய், மனச்சோர்வு மற்றும் அறிவாற்றல் குறைபாடு ஏற்படுவதாக2023ம் ஆண்டின் NCBI அறிக்கை எச்சரிக்கிறது. சர்க்கரை சாப்பிடுவதால் நமக்கு எந்த வகையான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.
உண்மையில் சர்க்கரையில் சத்து இருக்கிறதா?:சர்க்கரையில் கார்போஹட்ரேட்டை தவிர எந்த விதமான சத்துக்களும் கிடையாது. இது குறிப்பாக, மக்காச்சோளத்திலிருந்து எடுக்கப்படுகிறது. நம் உடலுக்கு ஆற்றலை வழங்க அவசியமான ஒன்றாகச் சர்க்கரை இருந்தாலும் இதனை அதிகம் உட்கொள்வதால் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.
சர்க்கரை ஏற்படுத்தும் பாதிப்புகள்:
உடல் பருமன்:அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளும் போது, அது உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. சர்க்கரையில் அதிக கலோரிகள் இருப்பதால் எளிதாக உடல் எடையை அதிகரித்து மற்ற நோய்களுக்குப் பாதையை அமைக்கிறது.
நீரிழிவு நோய்: சர்க்கரை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரித்து உடலில் இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால், நீரிழிவு நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இதய நோய்: கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால் இது இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.
பற்களைப் பதம் பார்க்கிறது:அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால் பல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். வாயில் பாக்டீரியாவை வளர்த்து, பல் துவாரங்கள் மற்றும் ஈறு நோய்க்கு வழிவகுக்கிறது.
ஆற்றல் அளவு குறைகிறது: சர்க்கரையைச் சாப்பிட்ட பிறகு, உடனடியாக உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படுவது போல இருந்தாலும், காலப்போக்கில் அது ஆற்றலின் அளவை குறைகிறது.
சரும பிரச்சனைகள்: அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால் முகப்பரு மற்றும் சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும்.
சர்க்கரையைக் குறைப்பது எப்படி?
பானங்களில் சர்க்கரையைக் குறைக்கவும்: முதலில், டீ, காபி,சோடா, குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பழச்சாறு குடிக்கும் போது சர்க்கரை போடாமல் குடித்துப் பழகுங்கள்.
இனிப்புகளைக் குறைவாகச் சாப்பிடுங்கள்: பிரட், சாக்லேட் மற்றும் பிற இனிப்பு உணவுகளின் அளவைக் குறைக்கவும். குறிப்பாக, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும்.
பழங்களின் அளவை அதிகரிக்கவும்:சர்க்கரை சாப்பிடத் தோன்றும் போதெல்லாம், இனிப்புகள் இயற்கையாக உள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களின் அளவை அதிகரிப்பதன் மூலம் உங்கள் இனிப்பு தேவைகளைப் பூர்த்தி அடைகிறது.
வீட்டில் சமைத்து உண்ணுங்கள்: கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பெரும்பாலும் சர்க்கரை அதிகமாக இருக்கும். எனவே வீட்டில் சமைத்துச் சாப்பிட வேண்டும்.
சர்க்கரை மாற்றுகளைப் பயன்படுத்தவும்: சர்க்கரைக்குப் பதிலாகத் தேன், வெல்லம் அல்லது ஸ்டீவியா (Stevia) போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.