சென்னை:உலகம் முழுவதும் டெங்கு பாதிப்பால் கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பொதுவாக, மழைக்காலங்களில் தேங்கும் நீரிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களிலிருந்து டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
டெங்குவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை எனக் கூறும் WHO, பாதிக்கப்பட்டவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதன் மூலம் குணமடைகிறார்கள் என்கிறது. இது வரையில், 2023ல் தான் அதிகமான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
டெங்கு அறிகுறிகள்: டெங்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொசு கடித்த 4-10 நாட்களுக்குப் பின்னர் தான் டெங்குகாய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரியும். இந்த அறிகுறிகள் 2 முதல் ஒரு வாரத்திற்கு இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம்கூறுகிறது.
- அதிக காய்ச்சல்: உடல் வெப்ப நிலை 40°C (104°F) வரை செல்லலாம்
- கடுமையான தலைவலி
- கண்களுக்குப் பின்னால் வலி
- தசை மற்றும் மூட்டு வலி
- வாந்தி
- பலவீனமாக உணர்வது
- உடலில் அரிப்பு ஏற்படுவது
மீண்டும் பாதிப்பு வருமா?: ஒரு முறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறுவதை உலக சுகாதார நிறுவனம் மறுக்கிறது. இரண்டாவது முறையாக டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதன் வீரியம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கிறது.