கரோனாவை மிஞ்சும் கொடிய வைரஸ் சீனாவில் பரவி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய வைரஸ் பரவல் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில், கரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி-HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. இந்த தொற்றால் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 'சீனாவில் பூதாகரமாக பரவத் தொடங்கிய புதிய வைரஸ் தொற்று, சளியை உண்டாக்கும் மற்ற சுவாச தொற்றுகளை போன்றது' என்றும், 'இதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை' என பொது சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் அதுல் கோயல் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 'இந்த தொற்று குளிர்காலத்தில் ஏற்படும் மற்ற தொற்றுகளை போன்றது, இதற்கு மற்ற சுவாச நோய்தொற்றுகளுக்கு எதிரான வழக்கமான முன்னெச்சரிக்கை போதுமானது' எனவும் குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் அதுல் கோயல். இந்த நிலையில், மனித மெட்டாப்நியூமோவைரஸின் பாதிப்புகள், அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
HmPV வைரஸ் பாதிப்பு?:
- இந்த நோய் தொற்றின் அறிகுறிகள் கரோனா, காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும்.
- இருமல், காய்ச்சல், சளி, தொண்டை வலி ஏற்படும்
- தீவிர வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா வருவதற்கான வாய்ப்பு உள்ளது
- நோய்தொற்று ஏற்பட்ட 3 முதல் 6 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் தோன்றும்
- குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு நோய் தொற்று எளிதில் வர வாய்ப்புகள் அதிகம்
- சுவாசப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் தொற்று ஏற்படும்.